Pradosham.com © All Rights Reserved
தேவாரத் திருமுறைகளின் விளக்கம் தொடர்கிறது்

அவமதித்தவனுக்கு அருள் புரியும் மதிசூடியோன்

இறைவன் தன் திரு முடியிலே பிறையைச் சூடியிருக்கிக்கிறான். பிறைக்குக் களங்கம் இல்லை; வெண்மதி அது. சந்திரன் தன் குருவின் மனைவியை விரும்பியவன். சிவபிரானை விலக்கிவிட்டுத் தக்கன் செய்த யாகத்துக்குப் போய்ச் சிவதுரோகம் செய்தவன். அவனைப் போலவே இந்திரன், சூரியன் முதலியெ தேவர்களும் அங்கே சென்றிருந்தார்கள். இறைவன் அவர்களுக்கெல்லாம் உரிய தண்டனையைக் கொடுத்தான். சந்திரனைக் காலாலே தேய்த்தருளினான். மற்றவர்களுக்குக் கிடைத்தது போலவே சந்திரனுக்க்கும் தண்டனை கிடைத்தாலும், அந்தத் தண்டனையால் இறைவனுடைய திருவடித் தொடர்பு அவனுக்கு உண்டாயிற்று, கோபத்தால் இறைவன் தேய்த்தாலும் திருவடிக் கீழ்ப்பட்ட சிறப்பால் சந்திரனுக்குத் தவத்தால் கிடைக்கும் பயன் கிடைத்தது. இறைவனுடைய தலைமேல் ஏறிக்கொண்டான். கோபத்தால் குழந்தை கற்கண்டை வீசி எறிகிறது. அதை ஒருவன் பொறுக்கித் தின்றால் அதில் இனிப்பு இல்லாமல் போய்விடுமோ? இறைவனுடைய திருவடி சம்பந்தம் பெற்றமையால் மதிக்கு இருந்த குறைகள் நீங்கின. என்ன தவறு செய்திருந்தாலும் தன் திருவடியின் தொடர்பு பெற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற உண்மையை இதனால் இறைவன் புலப்படுத்தினான். தன்னை அன்பு செய்து வழிப்ட்டாருக்கு அருள்வதைவிடத் தன்னை அவமதித்தவனுக்கு அருள் செய்வது பெரிய கருணையல்லவா? இதை நினைக்கும் போது உள்ள்ம் அவன்பால் ஈர்க்கிறது. மதிசூடியாக இறைவன் நின்று, அதனால் தன் சிறந்த கருணையைப் புலப்படுத்தி, அன்பர்களின் உள்ளத்தைக் கவர்கிறான்.

 காடுடைய சுடலை

எல்லா உயிர்களுக்கும் இறைவன் தந்தை. பக்குவ ஆன்மாக்களுக்கு மாத்திரம் தந்தை, மற்றவர்களுக்குத் தந்தை அல்ல என்று சொல்ல முடியாது. எல்லா உயிர்களுக்கும் போகங்களை உதவி வாழச்செய்கிறான். ஆனால் சில உயிர்களே நன்னெறியில் நின்று அவனை நாடிச் செல்கின்றன. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு நல்ல பிள்ளைகளுக்குச் சிறப்பான ஆடையணிகளை அணிகிறாள். கெட்ட பிள்ளைகளை ஒறுக்கிறாள். எல்லாப் பிள்ளைகளுக்கும் சோறு ஊட்டுகிறாள். இரவு வந்தால் எல்லாக் குழந்தைகளியும் தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறாள். உணவு, உடை, அணிகலங்கள் பூட்டி அந்த அந்தக் குழந்தையின் நிலைக்கு ஏற்றபடி வேறுபாடு காட்டி அரவணைக்கிறாள். ஆனால் உறங்கச் செய்யும்போது இந்த வேறுபாடு இருப்பதில்லை. எல்லொரையும் உறங்கச் செய்கிறாள். குழந்தைகளெல்லாம் உறங்கும்போது தான்மாத்திரம் உறங்காமல் இருக்கிறாள். அப்படியே இறைவன் உயிர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றபடி அவ்வுயிர்களுக்குப் போகங்களைக் கூட்டுவிக்கிறான். பிரளயகாலத்தில் எல்லொரையும் தன் அடிக்கீழ் அடக்கிக் கொள்ள்கிறான். அவ்வொரு பிராணியும் மரிக்கிறது. அதற்குச் சுடுகாடு உண்டு, உடலெடுத்த எல்லா உயிர்களும் ஒருங்கே மரிக்கும் காலம் பிரளயம். அப்பொது எல்லா இடமும் மகா மயானம் ஆகிவிடும். அந்த மகா மயானத்தில் எல்லா உயிர்களும் அடங்கி நிற்கும்போது எல்லவற்றையும் சுட்டெரித்து நிற்கும் இறைவன், அந்தச் சுட்ட நீற்றைத் தன் திருமேனியிலே பூசிக்கொண்டு ஆடுகிறான். தன் குழந்தைகளுக்குள் வேறுபாடு இன்றி எல்லொரும் தூங்கும் போது தனித்து நின்று களிக்கும் தாய்போல, இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறான். தன் குழந்தைகளுக்கு ஒய்வு கொடுத்ததனால் உண்டான ஆனந்தத்தால் ஆடுகிறான். தன் திருமேனி முழுதும் சுடுகாட்டிலே உள்ள சுட்ட சாம்பலை அணிந்து ஆடுகிறான். எல்லாம் ஒடுங்கின விடத்துத் தான் ஒருவனே சர்வ சக்தி மானாக நின்று நடம் புரிகிறான். எல்லா உயிர்களுக்கும் ஒய்வு தருகின்றானே; அவனுக்கு எத்தனை கருணை இருக்கவேண்டும்! அத நினைக்கையில் உள்ளம் கசிகிறது. காடுடைய சுடலைப் பொடி பூசி ஆடும் திருக்கோலத்தைக் காட்டி உள்ளம் கவரும் பெருமான் இறைவன்.

தோடுடைய செவியனாகி, விடை ஏறி, ஓர் தூவெண்மதி சூடி, காடுடைய சுடலைப் பொடி பூசி வரும் பெருமானதுகோலத்தின் உண்மையை நினைக்கும்போது உள்ளம் மயங்கி உருகுகிறது, சம்பந்தப் பெருமானுக்கு. அவனுடைய பேரருட் சிறப்பையே இந்த நிலைகள்யாவும் காட்டுவதனால் அத்தகைய கவர்ச்சி உண்டாகிறது. அதனால் 'என் உள்ளம் கவர் கள்வன்' என்கிறார்.

 

இறைவனே கள்வன்

கள்வன் என்று இறைவனைக் கூறுகிறார் சம்பந்தர். யஜுர்வேதத்தில் இறைவனுடைய புகழைக் கூறுவதும் பஞ்சாட்சரத்தைத் தன் நடுவிலே பெற்றதுமாகிய ருத்திரம் இறைவனைக் கள்வர் தலைவனென்று கூறும். கள்வன் பிறர் அறியாவாறு தன் தொழிலைப் புரிபவன்; தன்னை மறைத்துக் கொள்பவன். இறைவனும் சம்பந்தப் பெருமானை ஆட்கொண்டது பிறர் அறியா வகையில்தான். அவன் உருவைப் பிறர் காணல் இயலாது. ஒரு பொருளை உடையாரிடம் முன்னே சொல்லாமலே அப் பொருளை உடையாரிடமிருந்து அப்பொருளைக் கவர்வது கள்வன் தொழில். இங்கும் சம்பந்தப் பெருமானுடைய உள்ளத்தை அவர் எதிபாராமலே கவர்ந்து கொண்டவன் இறைவன். இந்தப் பாடலை முதலாகவுடைய திருப்பதிகத்தில் கடை காப்பு ஒழிந்த பத்த்ப் பாடல்களிலும் 'என் உள்ளங்கவர் கள்வன்' என்று பாடுகிறார் தமிழ் வித்தகர்.

இவ்வாறு உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் யார்? அவன் பிரமபுரம் மேவிய பெம்மானாகிய இவன் என்று சொல்லவருகிறார். பிரமபுரம் என்பது சீர்காழிக்கு ஒரு பெயர். பிரமன் இங்கே இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான். அதனால் இது பிரமபுரம் ஆயிற்று. இந்தச் செய்தியைக் குறிப்பிக்கிறார் ஆளுடைய பிள்ளையார். 'நல்ல அழகிய இதழ்களையுடைய தாமரை மலரில் இருக்கிற பிரமதேவன் பிரளயகாலத்துக்குப்பிறகு உலகத்தைப் படைக்க எண்ணினான். அப்போது இங்கே வந்து பணிந்து துதித்துப் படைப்புக்குரிய ஆணையைப் பெறவேண்டி நிற்க, அது கண்டு திருவுளம் மகிழ்ந்த இறைவன் அவனுக்கு அருள் செய்தான்'. அவ்வாறு அருள்பாலித்த சிறப்பைப் பெற்ற பிரமபுரத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் பெருமானாகிய இவன் என்ற சொல்கிறார் சம்பந்தர்.

 பிரமனுக்கு அருள்பாலித்தவன்

உலகமெல்லாம் பிரளயத்தில் அழிந்தபோது, சீகாழி என்னும் தலம் மாத்திரம் அப் பிரளயத்தில் மூழ்காமல் தோணி போல மிதக்க, அதன்கண் இறைவன் இழுந்தருளியிருந்தான். அதனால் இத் தலத்துக்கு தோணிபுரம் என்ற திருநாமமும், இறைவனுக்குத் தோணியப்பர் என்ற திருநாமமும் உண்டாயின. பிரளயம் நீங்கினபின் இறைவன் பிரமனைத் திருமால் மூலம் உண்டாக்கினான். பிரமன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கி அருள்பெற்றுத்தன் படைப்பினைத் தொடங்கினான். இது இத்தலத்து வரலாறு.

 "ஏடுடைய மலரான் முனை நால் பணிந்து
ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே".

திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினவுடனே, "எப்படி உலகத்திப் படைப்பது?" என்ற கவலை பிரமனை பற்றிக்கொண்டது. உடனே தோணிபுரம் வந்தான். அதனால் "ஏடுடைய மலரான்" என்று குறிப்பித்தார் சம்பந்தர். மிகப் பழங்காலத்துச் செய்தி இது; அதனால் "முனை நாள்" என்றார். இனை என்பது முனை என இடைக்குறையாக நின்றது. இறைவன் திருமுன்னர் விழுந்து வணங்கியதைப் "பணிந்து" என்றும், இறைவன் புகழை யெல்லாம் கூறித்துதித்ததை "ஏத்த" என்றும் புலப்படுத்தினார். இறைவன், "இனி நீ நன்றாகப் படைப்புத் தொழிலைச் செய்து வருக" என்று ஆணை தந்ததையே, 'அருள் செய்த' என்றார். எல்ல இடங்களும் அழிந்த போதும் தான் மட்டும் அழியாமல் இருந்த இறுதி இடமே, எல்ல எடங்களும் தோற்றும் போது முதலில் எண்ணுவதற்குரியது. எல்லாப் படைப்புக்கும் மூலமான அருளைப் பெற வைத்த பெருமை சிறந்த்தாதலின் அதனை நினைந்து "பீடுடைய பிரமாபுரம்" என்றார். பிரமபுரம் என்பதே இசைப் பாவுக்கு ஏற்றபடி பிரமாபுரம் என நீண்டது. சம்பந்தப் பெருமானுடைய பாட்டினால் பிரமபுரம் தன் பெயரிலும் புகழிலும் நீண்டது. மேவுதல் என்பதற்கு விரும்புதல் என்றும் தங்குதல் எண்றும் இரு பொறுள் உண்டு. இங்கே அவ்விரண்டையும் சேர்த்து விரும்பித் தங்கிய என்று பொருள் கொள்ளுதல் சிறப்பாகும். பெருமான் என்பது "பெம்மான்" என நின்றது. இவன் என்பது அணிமைச் சுட்டு. இறைவனை அறியாதவர்கள் யாவரும் அவன் மிகமிக அணிமையில் இருந்தாலும் சேய்மையிலுள்ளவனாகவே கருதி அவன் என்பார்கள். வேதம் முதலிய நூல்களும் அது என்றே குறிக்கும். ஆனால் இறைவனை உணர்ந்து தம் உள்ளத்தை அவனுக்கே அளித்து அவனைத் தம்முள்ளே உணரும் ஞானப்பிரான் ஆதலின் அவ்வணிமை தோன்ற 'இவன்' என்றார். நெஞ்சுக்கு அணியதாக இருக்கும் பொருளை இகரச் சுட்டாலே சுட்டுதல் மரபு (இவன் என்றார் கருத்துக்கண் அணிமையான் - புறநானூறு 72:2 பழையஉறை) அன்று, இரண்டும் அசை நிலைகள்.

நாம் முழுப்பாட்டையும் மீண்டுமொருமுறை இலக்கணரீதியாகப் பார்ப்போம்.

"தோடுடைய செவியன்விடை ஏறிஓர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசிஎன்
உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாள்பணிந்து
ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே."

 பொருள் :

"தோட்டை உடைய செவியை உடையவனாகி, இடப வாகனத்தின்மேல் ஏறி, தூய வெள்ளிய பிறையைத் தலையில் வைத்து, சுடுகாடு பெற்ற சுடுதலையுடைய திருநீற்றைப் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் (யாரெனில்), இதழ்களையுடைய வெண்தாமரை மலரிலே தோற்றிய பிரமதேவன் முன் காலத்தில் வழிபட்டுத் துதி செய்ய, அவனுக்குத் திருவருள் பாலித்த சிறப்பையுடைய பிரமபுரத்தின்கண் விரும்பி எழுந்தருளிய பெருமானாகிய இவன்".

 விரிவாக்கம் :

செவியன் என்பது குறிப்புவினைமுற்று எச்சம். மதி என்பது பெரும்பாலும் முழு மதிக்கு வருவது. இங்கே தூவெண் மதி என்றதனாற் பிறையாயிற்று, சூடுதல் - தலையில் அணிதல். சுடலை - சுடுதல்; காடுடைய சுடலை - காடு என்ற பெயரை உடைய சுடலை, காட்டின் தன்மையை உடைய சுடலை என்றும் பொருள் கூறலாம். பிரமாபுரம்; செய்யுள் விகாரம்.

உலகின் தோற்றத்துக்கு மூலமான அருளை இறைவன் வழங்கிய இடம் பிரமபுரம். அத்தலமே தமிழ் மறையாகிய தேவாரம் தொடங்குவதற்கும் இடமாயிற்று. இறைவன் திருவருள் துணைக்கொண்டு வேதத்தை எப்பொதும் நான்முகன் ஓதிப் பணிபுரியும் இடத்தில் தமிழ் வேதத்தைப் பாடிப் பணிபுரியும் சம்பந்தப்பிரான் அருள்பெற்றார்.

தோடுடைய செவியன் என்பதனால் உலகுயிர்த் தோற்றங்களுக்கு மோலமாகிய அருள் வெளிப்பாட்டைக் குறித்தார். இது படைப்பைப் புலப்படுத்தியது. விடையேறுதலும் மதி சூடுதலும் அறம், மறம் உடையாருக்கு முறையே இன்ப துன்ப நுகர்ச்சி தந்து பாதுகாக்கும் காப்புத்தொழிலைப் புலப்படுத்தும், சுடலைப் பொடி பூசியது சங்காரத்தைக் குறிப்பிக்கும். கவர் கள்வன் என்பது மறைப்பாகிய திரோதத்தைக் குறிக்கும். ஏத்த அருள் செய்த என்பது அநுகிரகத்தைக் குறிக்கும். இவ்வாறு இறைவனுக்குரியனவாகிய படைப்பு, அளிப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் என்னும் ஐவகைத் தொழில்களும் குறிப்பாக இப் பாடலில் சொல்லப் பெற்றன.

இது தேவாரத்தில் முதல் திருமுறையில் முதல் பதிகத்தின் முதற் பாட்டு.

 காதற் செய்தி

இந்தப் பட்டில் தமிழுக்கே உரிய காதல் துறையும் குறிப்பாக அமைந்துள்ளது. பாட்டுடைத் தலைவனுடைய பெயரைக் கூறியமையால் இது புறத்துறையைச் சார்ந்தது. பாடாண்திணையில் க்டவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தா பக்கம் என்னும் துறயின் பாற்படும். தலைவனுடைய பிரிவால் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நின் உள்ளம் கர்ந்தவன் யார்?" என்று தோழி கேட்க, அவளுக்குத் தலைவி கூறும் கூற்றாக அமைந்தது இந்தப் பாட்டு. இறைவனாகிய காதலினிடம் ஆன்மாவாகிய காதலி கொண்ட காதலைக் குறிப்பது இது.

இந்தக் காதற் செய்தி இந்தப் பாட்டில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இந்தப் பதிகம் முழுவதும் இந்தத் தெய்வக் காதல் பற்றிய பாடல்களால் ஆனது என்பதை இப்பதிகத்திலுள்ள வேறு இரண்டு பாடல்கள் தெளிவாக உண்ர்த்தும்.

நீர்பரந்தநிமிர் புன்சடை மேலோர்
நிலாவெண் மதிசூடி
ஆர்பாந்த இன வெள்வளை சோரஎன்
உள்ளங் கவர்கள்வன்
மறைக லந்தஒலி பாடலொ டாடலர்
ஆகி மழுஏந்தி
இறைக லந்தைன வெள்வளை சோரஎன்
உள்ளங் கவர்கள்வன்.

என வரும் பகுதிகளால் இது புலப்படும்.

தமிழாற் பாடல் பாடத் தொடங்கும் சம்பந்தப் பிள்ளையார் தமிழுக்கே சிறப்பாகச் சொல்லும் காதல் துறையில் தம் முதற் பதிகத்தை அமைத்தது பொருத்தமேயாகும். ஏனெனின், அவர் தமிழ் வித்தகர் அல்லவா?

அந்த இறைவனை, திருஞானசம்பந்தரை ஆட்கொண்டவனை, ஞானப்பால் ஊட்டியவனை, உள்ளத்தை கவர்ந்த கள்வனை நாமும் வணங்கி அவன் தாள் பணிவோம்.

(முதற் பாகம் முற்றும், அடுத்த பாகம் விரைவில்).

தேவாரம்

'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய கடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த
பீடுடையபிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே'. திருஞானசம்பந்தர்
தேவாரம் - ஒர் எளிய அறிமுகம் - உள்ளம் கவர் கள்வன் - 
திறட்டியவர் : ஈஷ்வர் கோபால் - பகுதி ஒன்று -பக்கம் ஒன்று
திருஞான சம்பந்தமூர்திகளின் தேன் சொட்டும் தேவாரம் 
ANALYTICAL PRESENTATION OF SRI THIRUGYAANA SAMBANDHAR's THEVARAM